1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (16:47 IST)

குழந்தையை உயிருடன் மீட்ட தமிழர்களுக்கு சிங்கப்பூர் அரசின் உயரிய விருது

சிங்கப்பூரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை உயிருடன் மீட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூர் தேசத்தின் கிழக்கு ஜூராங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தை பால்கனி ஓரம் நின்று தனது ஐ-பேடில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, பால்கனி தடுப்புக் கம்பியின் வெளிப்புறமாக ஐ-பேட் விழுந்து விட்டது.
 

 
அதனை எடுக்க கம்பிக்குள் நுழைந்த குழந்தை உள்ளே சிக்கிக்கொண்டது. சுவருக்கும் கம்பித் தடுப்புக்கும் இடையில் உள்ள பகுதிக்குள் விழுந்த குழந் தையின் உடல் முழுவதும் மாடியில் இருந்து கீழே தொங்கியது.
 
தலைப்பகுதி மட்டும் இடைவெளிக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை வெளியே வர வழியறியாமல் கதறி அழ ஆரம்பித்தது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அப்போது, அருகாமையில் சாலை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்கள் சண்முகநாதன் (35), முத்துக் குமார் (24) ஆகியோர் உடனடியாக விரைந்து சென்ற அவர்கள் 2ஆவது மாடிக்கு ஏறிச் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
 
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏணியின் உதவியுடன் குழந்தையை கீழே இறக்கி காப்பாற்றினர். இந்த அவசர உதவியை செய்த சண்முகநாதன், முத்துக்குமார் இருவருக்கும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு படை வழங்கும் உத்வேக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.