இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை.! அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் தீர்ப்பு.!!
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமின் கோரி அவரது தரப்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.