1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:57 IST)

உக்ரைனின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனில் கிழக்குப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு எதிராக, அந்நாட்டு அரசு ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது அந்நாட்டு அரசுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்று ரஷ்யஅதிபர் விளாதிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
 
ரஷ்யாவுடன் இணைய விரும்பி உக்ரைனின் கிழக்குப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை நோக்கி, 20 டாங்க்குகளையும், ராணுவ வீரர்களுடன் கவச வாகனங்களையும் உக்ரைன் அனுப்பியது.
 
ரஷிய ஆதரவாளர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பியுள்ள உக்ரைனின் செயல், அந்நாட்டை உள்நாட்டுப் போருக்கு தூண்டுவதாதக உள்ளது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ரஷ்யஅதிபர் விளாதிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
 
இதுதொடர்பாக ஜெர்மன்அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லுடன் அவர் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதரக உயரதிகாரிகள் மேற்கொள்ளும் நான்கு தரப்புப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை, தங்களது உரையாடலின்போது இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே, உக்ரைனின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி உக்ரைனில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்கு உக்ரைன் அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். நிலைமை சீராக வேண்டுமானால், அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், உக்ரைனின் ராணுவ வாகனங்களை வழிமறித்த ரஷ்ய ஆதரவாளர்கள் 6 ராணுவ டாங்கி வாகனங்களை சிறை பிடித்ததாகவும் சுமார் 300 உக்ரைன் ராணுவவீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஆனால், உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியினரே, ரஷ்யாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதாகவும், அவர்கள் கவசவாகனங்களில் ரஷ்ய கொடிகளை ஏற்றியுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.