இங்கிலாந்தில் இந்திய தூதர்கள் மீது வீட்டு வேலைக்கார பெண்கள் புகார்

Last Updated: செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (18:12 IST)

இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய தூதர்கள் குறைவான சம்பளம் தருவதாக வீட்டு வேலைக்கார பெண்கள் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம்
புகார் செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள இந்திய தூதரின் வீட்டில் பணிபுரியும் நேகா என்ற பெண் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம் புகார் செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த இவர் தூதர் வீட்டில் வாரம் முழுவதும் விடுமுறை இன்றி வேலை செய்வதாகவும், சமையல் மற்றும் துப்புரவு செய்யும் பணியில் 24 மணி நேரமும் வேலை செய்யும் தனக்கு மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே தருவதாக கூறியுள்ளார். தனக்கு 12 வருடங்களாக இதே சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நேகாவின் வருமானத்தில் அவரது தாய், தந்தை, சகோதரி மற்றும் அவரது 2 குழந்தைகள் வாழ்கின்றனர்.

இதுபோன்று அனிதா என்பவரும் மனித உரிமை அமைப்பிடம் புகார் கூறியுள்ளார். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை வாங்குவதாகவும் தன்னை தனியாக வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. தூங்கும் போது கூட குழந்தைகளுடன் தூங்கும்படி வற்புறுத்துகின்றனர். போதிய சம்பளமும் தருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவர்களது புகார்களை பெற்றுக்கொண்ட மனித உரிமை அமைப்பு இந்திய தூதர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோபரகடே தனது வீட்டு வேலைக்கார பெண் சங்கீதாவுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதுபோன்று இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய தூதர்களும் வீட்டில் பணிபுரியும் பெண்களுக்கும் மிக குறைந்த சம்பளம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :