1. செய்திகள்
  2. 2014 -நிகழ்வுகள்
  3. உலகம் 2014
Written By சித்தம் அழகியான்
Last Modified: புதன், 17 மே 2017 (18:43 IST)

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.


 

மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.


 

தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் ஸ்ரீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது. தொடக்கமே எம்மையெல்லாம் நிமிர்ந்து இருக்க வைத்த அந்த இசையொலி உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வினை எங்கும் கண்டதில்லை. ஆதி தாளத்தில் அமைந்த நவராகமாளிகா வர்ணத்தோடு நிகழ்வு ஆரம்பித்து தொடர்ந்து Gowla ராகத்தில் அமைந்த முத்துச்சுவாமி தேசிகரின் பாடலான சிறீ மகா கணபதியோடு தொடர்ந்தது.

பாடகர் ஸ்ரீஅகிலன் சிவானந்தனின் குரல் வளத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த தாயே திரிபுர சுந்தரி என்ற பாடலும் பின்னர் பேகாக் ராகத்தில் அமைந்த ஆடும் சிதம்பரம் பாடலும் சபையோரை கட்டி வைத்துவிட்டது. செல்வன். கணாதீபனின் அமைதியான ஆனால் லாவகமான வாசிப்பு அவரது திறமையையும் குருவின் பயிற்சியையும் புடம்போட்டு காட்டி நின்றது.  

அணியிசைக் கலைஞர்கள் தமது திறமையை வெளிக்கொண்டு வந்ததோடு அரங்க நாயகன் கணாதீபனுக்கு முழு உற்சாகத்தை கொடுத்து அவரை மிளிரச் செய்து, அவரது திறமையை சபையோர் முன் படைக்க வழங்கிய ஒத்துழைப்பு அபாரம். அதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. Hindola ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சந்திர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.



அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தேறியது. தொடர்ந்து கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது சபையோரின் பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது.

இந்நிகழ்ச்சிகளின் இடையிடையே பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கி சிந்தனைக்கு விந்தளித்திருந்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம். பக்க வாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி ஸ்ரீ பத்ரி, கெஞ்சீரா வாசித்த தென்காசி ஸ்ரீ ஹரிகரன் பரமசிவம், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம். தீனதயாளு, கடம் வாசித்த உள்ளுர் கலைஞரான திவாகர் யோகபரன், தம்புரா வாசித்த செல்வி. கீர்த்தனா ராஜசேகர் மற்றும் செல்வன். நிவாஷன் தயாபரன் ஆகியோர் பாடகர் ஸ்ரீ அகிலன் சிவானந்தன், நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் மிருதங்க இசையோடு பார்வையாளர்களை பரவசப்படுத்தி விட்டனர்.

மிக மிகக் கடுமையான ஜதிகளையும் தாளக்கட்டுக்களையும் கொண்ட கீர்த்தனைகள் பாடல்களுக்கு கணாதீபன் அசராமல் மிருதங்கத்தினை கையாண்டவிதம் தானொரு தலைசிறந்த கலைஞன் என்பதனை உணர்த்தி விட்டார். நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளியின் நிறுவனர் ஸ்ரீமதி. ஷோபா சேகர், சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சுப்ரமணியம் ராஜரட்ணம் அவர்களும் சிறப்பித்தனர்.

சுருங்கக் கூறின் ஒரு அரங்கேற்ற நிகழ்வு என்ற எண்ணத்தையே மனதை விட்டு அகல வைத்து மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது அரங்கேற்றம். அனைத்து கலைஞர்களும் மிகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு மேல் குரு ஸ்ரீ யோகராஜா கந்தசாமியும் அரங்க நாயகன் கணாதீபனுக்கும் வாழ்த்துக்கள்.
 
-சித்தம் அழகியான்