கஜா புயல் நிவாரணத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
சமீபத்தில் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிக்கு நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருசில இடங்களில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களை முற்றுகையிடும் நிகழ்வுகளும் நடந்தது.
இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை மின்சார வாரியம் விரைந்து முடிக்க முதற்கட்டமாக ரூ.200 கோடி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். அதேபோல் கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம். வலைகள் மட்டும் சேதமடைந்திருந்தால் ரூ.10,000 மற்றும் பழுது நீக்கம் செய்ய ரூ.5000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்,.
அதுமட்டுமின்றி கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடவுள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன