திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (18:44 IST)

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ; 5 வயது சிறுமி மரணம் : சென்னையில் அதிர்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 5 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை கொடுங்கையூர் காவிரி நகரில் வசிப்பர் கோபி. இவரின் மனைவி லோகேஸ்வரி. இவர்களின் மகள் தன்ஷிகா(5). கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தன்ஷிகா படித்து வந்தாள்.
 
இந்நிலையில், அம்மை நோய்க்கான தடுப்பூசியை போட தன்ஷிகாவை அவளின் பெற்றோர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், ஊசி போட்ட நாள் முதல் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் நல பாதிப்புகளால் தன்ஷிகா அவதிப்பட்டாள். எனவே, தன்ஷிகாவிற்கு தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தன்ஷிகா மரணமடைந்தாள். மேலும், ஒரு சில குழந்தை இறந்து போவது சகஜம் என மருத்துவர்கள் கூறியது பெற்றோர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் வரவழைத்தது. எனவே, தன்ஷிகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது எனக்கூறி, அவளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
புதிதாக வாங்கப்பட்ட வெளிநாட்டு மருந்த என் மகளின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்ததால்தான் அவள் இறந்து போய் விட்டாள் என தன்ஷிகாவின் தாய் லோகேஸ்வரி கதறி அழுதவாறு புகார் தெரிவித்தார்.