1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (09:16 IST)

விஜயகாந்தை வழிமறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வாகனத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவர் அந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று மாலை அவர், அந்த தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
இரவு 8.45 மணியளவில் அவர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு காந்தல்வாடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், டிராக்டர் மற்றும் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி விஜயகாந்தின் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
 
தங்கள் பகுதிக்கு வந்து விட்டு, அதன்பின் அங்கிருந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் உங்கள் பகுதிக்கு வருகிறேன் என்று விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டது. 
 
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.