ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்

Author தேமொழி| Last Updated: வியாழன், 31 ஜூலை 2014 (13:02 IST)

நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது
நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும்

ஒப்பிட இயலாது.
- ஸ்டெப்ஃபெனி கோலக்


ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை
31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற நிறுவனமான
‘டூபாண்ட்’ (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை
ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக
டாலர்களில்
பொருள் ஈட்டியது.
அதற்கு அடிப்படைக் காரணம், ஸ்டெப்ஃபெனி கோலக்
கண்டுபிடித்த
ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின்
உயிர்களைக் கவசமாக இருந்து காப்பாற்றியது இந்த ஆடைகளில் இருக்கும் குண்டு துளைக்காத இழை (bulletproof fiber)தான். உயிர் காக்கும்
இந்த செயற்கை
இழையின் பெயர் கெவ்லர் (Kevlar®).

குறைந்த எரிபொருள் பயன்படுத்தி ஓடும் கார்களைத் தயாரிக்க 1970 களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு காரணம் அக்காலத்தில் இருந்த
பெட்ரோல் பற்றாக்குறையாகும். அதனால் இரும்புக் கம்பிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கார் சக்கரங்களில் (car tires) அவற்றிற்கு மாற்றாக
எடை குறைந்த, ஆனால் உறுதியான செயற்கை இழைகளைப் பயன்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நைலான் போன்ற செயற்கை இழைகளைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த டூபாண்ட்
நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டது. டூபாண்ட் நிறுவனத்தின் வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் ஸ்டெப்ஃபெனி கோலக்கும் அங்கு ஒரு ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பலபடி சேர்ம ஆராய்ச்சி ( polymer research) முறையில் நீளமான கரிம சங்கிலியால் ஆன இழைகளைத் தயாரிக்க விரும்பிய ஆய்வாளர்கள், பல வேதிப் பொருட்களை ஒன்றுடன் ஒன்றாகக் கலந்தனர். பின்னர் அக்கலவையை ஒரு திரவத்தில் கரைத்து, அந்த
திரவக் கரைசலை செயற்கை இழை செய்யும் சுழலும் கருவியில் ஊற்றி (பஞ்சு மிட்டாய் செய்வது போலவே),
கருவியைச்
சுழற்றி இழைகளாக உருவாக்கினர்.


உருவாக்கிய இழைகளின் பண்புகளையும், உறுதியையும் அறிய அவற்றை அடுத்த படியாக பலவகைச் சோதனைகளுக்கு உட்படுத்தி ஆராய்ந்தனர்.ஸ்டெப்ஃபெனி கோலக்கும் இதே முறையில் திட நிலையில் இருந்த வேதிப் பொருள்களின் கலவையை, திரவக் கரைசலாக மாற்றினார். பொதுவாக இவ்வாறு கிடைக்கும் கரைசல் அடர்த்தி நிறைந்த பாகு போலவும், தெளிந்தும் இருந்தால் (அதாவது பார்ப்பதற்கு தேன் அல்லது சர்க்கரைப் பாகு போன்ற தோற்றத்தை ஒத்திருந்தால்) செயற்கை இழைகளை உருவாக்க சிறந்த கரைசலாக ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்படும். ஆனால் ஸ்டெப்ஃபெனி கோலக் உருவாக்கிய கரைசல் துகள்கள் நிறைந்து, கலங்கலாக மிகவும் நீர்த்துப் போன தோற்றம் (மோர் போன்ற தோற்றம்) கொண்டதாக இருந்தது.
அவருடன் பணிபுரியும் ஆய்வாளர்கள் அக்கரைசலைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்க ஆலோசனை சொன்னார்கள். கரைசலில் உள்ள திரவத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு இழைகளை விட்டுவிடும் இழை தயாரிக்கும் கருவியை (laboratory spinneret machine) இயக்கும் ஆராய்ச்சியாளரும் அந்தக் கரைசலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஸ்டெப்ஃபெனி கோலக் அந்தக் கரைசலை வடிகட்டி துகள்களை நீக்கிய பிறகு, மீண்டும் மிகவும் விடாப்பிடியாக அவரை வற்புறுத்தி செயற்கை இழை தயாரிக்கச் செய்தார்.
இந்த இழையை அழுத்தம் கொடுத்துச் சிதைக்கும் சோதனைக்கு உட்படுத்திய பொழுது, பெரும்பாலான இழைகள் நொறுங்கிவிடும். ஆனால் இந்த இழை அழுத்த நிலையையும் தாண்டி மிகவும் விரைப்பாகவும் நொறுங்காமலும் சிதையாமலும் இருந்தது. இந்தப் பண்பை நன்கு உறுதி செய்துகொண்ட பின்னர், ஸ்டெப்ஃபெனி கோலக் நிர்வாகத்தினரிடம் இந்தத் தகவலை அளித்தார். டூபாண்ட் நிர்வாகத்தினர் உடனே ஒரு ஆராய்ச்சிக் குழுவையே இதற்காக உருவாக்கி, இழையின் பல்வேறு பண்புகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.


பாலி – பாரஃபைனைலீன்
டெட்ரிஃப்தாலமைட் (poly-paraphenylene terephthalamide) என்ற இந்த இழைக்கு ஆய்வகத்தில் “ஃபைபர் பி” (“Fiber B”) எனப் பெயரிட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அச்சோதனைகளின் மூலம் இந்தச் செயற்கை இழை, எஃகை விட ஐந்து மடங்கு மிகவும் உறுதியானதாகவும், அதே சமயம் எடை குறைவானதாகவும் இருப்பதும், தீயெதிர்ப்புத் திறன் கொண்டிருப்பதும் அறியப்பட்டது. சந்தையில் ‘கெவ்லர் ‘ என்ற பெயரில் இந்த இழை அறிமுகப்படுத்தப்பட்டது. இழை கண்டுபிடிக்கப்பட்ட 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு கார் சக்கரங்களில் மட்டுமின்றி, அதன் உறுதியான மற்றும் எடை குறைவான பண்புகளின் காரணமாக உயிர் காக்கும் கவச ஆடைகளிலும், தலைக்கவசங்களிலும் 1975 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்


இதில் மேலும் படிக்கவும் :