திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 4 நவம்பர் 2018 (13:06 IST)

வடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை –நடிகர் விவேக் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் முத்திரை பதித்தவர்கள் பட்டியலில் வடிவேலுவும் விவேக்கும் முக்கியமானவர்கள். இருவருமே நீண்டகாலமாக ஒன்றாக நடிக்காமல் இருந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் என் எஸ் கிருஷ்ணன், பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகெஷ், கவுண்டமணி, செந்தில் என்ற நீண்ட நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் வடிவேலு மற்றும் விவேக் இருவருக்குமே அழியாத இடமுண்டு.

ஆரம்பகாலத்தில் வடிவேலு, விவேக் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்து நகைச்சுவை ராஜ்ஜியம் நடத்தினர். அவற்றில் விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பொங்கலோ பொங்கல் மற்றும் மனதை திருடி விட்டாய், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை மக்கள் இன்றும் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

ஒருகாலத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டனர். தனித்தனியாக வெவ்வேறு திசைகளில் பயணிக்க ஆரம்பித்தனர். இருவருமே சிறப்பாக நடித்தாலும் வடிவேலு நடிப்பு என்பதை தாண்டி மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அம்சம் எனும் அளவிற்கு தன் நகைச்சுவையின் மூலம் மக்களின் வாழ்க்கையோடு தன்னையும் தன் நகைச்சுவைக் காட்சிகளையும் இணைத்துவிட்டார்.

வடிவேலு தனது மார்க்கெட்டை இழந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் தொலைக்காட்சிம் யூட்யூப், மீம்ஸ், பேஸ்புக், ட்விட்டர் என மக்களின் அன்றாட வாழ்க்கையில் வடிவேலுவை தரிசிக்காமல் ஒரு தினம் கடக்காது. தினசரி நாம் பேச்சுகளிலேயே நாம் அறிந்தோ அறியாமலோ வடிவேலுவின் வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.  ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற எந்த சமூகவலைதளங்களிலும் வடிவேலு இல்லை ஆனால் சமூக வலைதளங்கள் முழுவதும் வடிவேலுவே உள்ளார் என்பதே வடிவேலுவின் வெற்றி.

வடிவேலு, விவேக் இரண்டு பேருமே தற்போது முன்போல படங்களில் அதிகமாக நடிக்காமல் இருக்கும் இந்த நேரத்தில் நடிகர் விவேக் மீண்டும் வடிவேலுவோடு இணைந்து நடிக்கும் தனது ஆசையை வெளியிட்டுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில் தனது விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார்.