திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (17:39 IST)

தனுஷுக்கு வித்தியாசமாய் வாழ்த்து சொன்ன வைகைப்புயல் வடிவேலு!

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு வைகைப்புயல் வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கதைக்காகவும், நடிப்புக்காகவும் மெனக்கெடும் ஒரு சில கதாநாயகர்களில் தனுஷும் ஒருவர். கோலிவுட்டில் ஸ்கூல் பையனாக ஆரம்பித்த அவரின் திரைப்பயணம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்றது அனைத்தும் அவரது திறமைக்குக் கிடைத்த வெற்றியே.

இந்நிலையில் இன்று அவரது 37 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறும் நிலையில் வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய டிவிட்டரில் ‘தமிழ் சினிமாவின் மீது காதல் கொண்டு, புதுப்பேட்டையில் படிக்காதவனாய் வலம் வந்து வேலையில்லா பட்டதாரியாய் கொடி நாட்டி வட சென்னையில் நீ அசுரனாய் மாறிய போது நம் மக்களைப் போல் நானும் மகிழ்ந்தேன். இந்த ஜகத்தினில் நீ கர்ணனாய் தோன்ற வாழ்த்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார். வடிவேலுவும் தனுஷும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.