1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J Durai
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (11:27 IST)

இன்று கே.பி.பாலசந்தர் நினைவுதினம்!!

எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயாமல், அடுத்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் கே.பி. பாலசந்தர். 
 
எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியவர். ஹீரோயிஸம் இல்லை. நாகேஷை ஹீரோவாக்கினீர்கள். எல்லோரும் எம்.எஸ்.வி.கேவி மகாதேவன் என்று ஓட, வி.குமாரை அடையாளம் காட்டியவர். பிறகு வி.எஸ்.நரசிம்மன். எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது நீங்களாகத்தான் இருக்கமுடியும். 
 
இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் உங்களிடம். தனக்கு என்ன பிடிக்குமோ... அது அரைக்கை சட்டை, கையில் கயிறு, விபூதி, காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், சோடாபுட்டி கண்ணாடி என தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நாயகன், நாயகி, துணை கதாபாத்திரங்கள், அது பொம்மை, அருவி, போன் என எதுவாக இருந்தாலும் எல்லாமே அப்டேட்டில். அது கே.பி.டச். நீங்கள் இயக்கிய நூறு படங்களில், எந்தப் படங்களானாலும் இப்போதைய இயக்குனர்களுக்கு சூப்பர் பாடம். படிப்பினை. 
 
திரையில் காட்டவே காட்டாத இருமல் தாத்தா, இன்னும் 'கண்' ணில் நிற்கிறார். வார்த்தையில் ஷார்ப். காட்சியில் நளினம், ஒரு சீனில் வந்தாலும் மனதில் பதியச் செய்யும் கதாபாத்திரம், கையை நீட்டி மடக்கி அப்படி இப்படிச் செய்யும் அ.ஒ.தொ. வில்லன் ஸ்டைல், ஆமாம் இல்லை என மாறி மாறி தலையாட்டும் ஜெயப்ரதா, தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்...  எல்லாவற்றுக்கும் மேலாக கமல், ரஜினி. கலைஞன் சாகாவரம் பெற்றவன். உண்மை. உதாரணம். கே.பி. எனும் பாலசந்தர் !- இன்று பாலசந்தர் நினைவுதினம்.