ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (10:10 IST)

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி

கவிஞர் வைரமுத்து, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய புத்தகங்களை விற்றுக் கிடைக்கும் தொகையை அப்படியே ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்திருந்தார். அதன்படி, புத்தகக் கண்காட்சி மூலம் கிடைத்த தொகையை நேற்று வழங்கினார். அப்போது பேசிய வைரமுத்து, “செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ் மொழிக்கு  உண்டு.
 
நெடுங்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் அது படைத்திருக்க வேண்டும். சில மொழிகளை ஈன்றெடுத்த தாய்த்தகுதி கொண்டிருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். இடையறாத தொடர்ச்சியோடு இயங்கி வரவேண்டும். இவைகளெல்லாம் செம்மொழிக்கென்று  குறிக்கப்பட்ட சில தகுதிகள். இவை அனைத்தும் கொண்ட தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அப்போதே உலகப் பல்கலைக்கழகங்களின்  இருக்கைகளில் அமரும் தகுதியைப் பெற்றுவிட்டது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான்  இருக்கிறது.
 
ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த  பெருமைமிக்கது. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலக கவனத்திற்கு உள்ளாகின்றன. இத்தனை பெருமைமிக்க பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைத்து  அமரப்போவது தமிழுக்குப் பெருமைதானே என்று சிலர் கருதலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில்  3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த  இருக்கையில் நிகழவிருக்கும் ஆய்வுகள் தமிழ் மொழியின் அதிகாரம்மிக்க உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் என்று நம்பலாம்.
இந்தியப் பண்பாட்டின் சரிபாதியை வகுத்துக்கொடுத்தது தமிழ். ஆனால், தமிழ் இன்னும் உலகத்தின் விளிம்பு வரைக்கும் சென்று விழவில்லை. அதற்கான  அரசியல் காரணங்களையும் சமூகக் காரணங்களையும் நாம் அறிவோம்.
 
வடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒரு மாக்ஸ் முல்லர் கிடைத்ததுபோல், அகிலத்திற்குத் தமிழை அறிமுகம் செய்ய இந்தத் தமிழ் இருக்கை சில அறிஞர் பெருமக்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
 
சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என் நூல்களின் மொத்தத் தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தருவதாக அறிவித்திருந்தேன். மொத்த விற்பனைத் தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்தத் தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாகத்  தமிழ் இருக்கைக்கு வழங்குகிறேன். தொகை சிறியதுதான். இது ஒரு நதியில் பெய்த 5 சொட்டு மழைதான். ஆனால் தமிழால் ஈட்டிய சிறுபொருள் தமிழுக்குப் பயன்படுகிறதே என்று நெஞ்சு நிறைகிறது. பெருமனதோடு பெற்றுக்கொண்டு பெருமைப்படுத்த வேண்டுகிறேன். இந்தத் தமிழ் இருக்கையை  முன்னெடுத்துச்சென்ற மருத்துவர் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இருக்கைக்குக் கொடைதந்த பெருமக்களெல்லாம்  நன்றிக்குரியவர்கள்.
 
இதுவரை சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் தமிழுக்கு ஒரு பிரிவையே தொடங்கும் அதிகாரம் பெறுகிறது. மூவாயிரம் ஆண்டு கண்ட தமிழ் அமெரிக்காவில் முடிசூடுகிறது; மகிழ்ச்சி” என்றார்.