முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி! தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டி என இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக திரையரங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசுடன் திரையுலகின் பிரதிந்திகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நன்றி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுடன் இன்று (06.07.2017) நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் திரையுலகின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிக்க திரைத்துறையை சார்ந்த 6 நபர்களை உள்ளடக்கிய இடைக்கால குழு ஒன்றினை அமைத்து விரைவில் தீர்வு எட்டப்படும்
மேலும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கிடையே தங்களது நேரத்தினை ஒதுக்கி எங்களது திரைத்துறையின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து மேற்கண்ட தீர்வு காண உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், நிதித்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும், வணிகத்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களுக்கும், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி அவர்களுக்கும் எங்களது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற திடீர் திரையரங்க வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும் மீண்டும் நாளை முதல் தொடரும் என்று நம்புகிறோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.