1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (14:38 IST)

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”   திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.
 
உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. 
 
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம்  என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில்,  ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. 
 
தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும்,  நடித்து முடித்துள்ளார்.
 
வரும் மே 25 ஆம் தேதி கேன்ஸ் விருது அறிவிக்கப்படவுள்ளது.  உலகம் முழுக்க திரையுலக படைப்பாளிகளால் கொண்டாடப்படும் கேன்ஸ் விருதான cannes palme d or 2024 விருதுக்காக இந்த முறை ஒரு இந்தியப்படம் கலந்துகொள்வதால்,  இந்தியா முழுக்க படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.