8 வருட காதல் திருமணத்தை தண்ணீருக்கடியில் கொண்டாடிய சினேகா - பிரசன்னா ஜோடி!
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். வசீகரா, ஆட்டோ கிராப் , பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில் , உன்னை நினைத்து , ஹரிதாஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக பேசப்பட்டார்.
பின்னர் தனது வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணித்த சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் சில வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தபோது கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தார்.
இந்நிலையில் நேற்று சினேகா பிரசன்னா தம்பதியர் தங்களது 8 ஆம் ஆண்டு திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சினேகா " இந்த பயணம் தொடர்ந்து அழகான நினைவுகளை உருவாக்கும்" என கூறி தங்களது முதல் திருமண நாளை நீருக்கு அடியில் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த காதல் ஜோடி இதேபோல் நீண்ட வருடங்கள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என அவர்களது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.