திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2017 (17:11 IST)

மெரினாவில் தான் சிவாஜி சிலை இருக்க வேண்டும் – மறுபடியும் மனுத்தாக்கல்

மெரினாவில் இருந்து சிவாஜி சிலையை அகற்றக் கூடாதென மறுபடியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

 
‘நடிகர் திலகம்’ என்று கொண்டாடப்படும் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் அது நிறுவப்பட்டது என்பதாலேயே, அந்தச் சிலையை அங்கிருந்து அகற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முடிவெடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தது.
 
‘சிலையை அகற்றி எங்கு வைப்பீர்கள்?’ என்று நீதிமன்றம் கேட்க, ‘அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்க இருப்பதாக’ தமிழக அரசு பதிலளித்தது. எனவே, சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உத்தரவிட்டது நீதிமன்றம். தற்போது அகற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், ‘மெரினாவிலேயே சிவாஜி சிலை இருக்க வேண்டும்’ என மனுத் தாக்கல் செய்துள்ளார் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன்.
 
“50 ஆண்டுகளாக கலைச்சேவை செய்தவர் சிவாஜி கணேசன். 300 படங்களுக்கும் மேல நடித்து, பல விருதுகளைப் பெற்றவர். தலைவர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு மெரினாவில் சிலை இருப்பதுபோல், சிவாஜி சிலையும் அங்குதான் இருக்க வேண்டும். மணிமண்டபத்துக்கு மாற்றக்கூடாது. இதுகுறித்து முதல்வரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது.