ஸ்ருதியின் சின்ன வயது ஆசை நிறைவேறியது…
பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஸ்ருதியின் சின்ன வயது ஆசை, தற்போது நிறைவேறியிருக்கிறது.
நாத்திகரான கமல், தன் மகள்கள் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை போடுவதில்லை. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக சண்டிகர் சென்ற ஸ்ருதி, அங்குள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
“சிறுவயதில் இருந்தே பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அது நிறைவேறாமலேயே இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து அது நிறைவேறியிருப்பதை, என்னால் நம்ப முடியவில்லை. விவரிக்க முடியாத ஆற்றலும், சூழ்நிலையும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்கிருக்கும் மனிதர்களின் அன்பும், விருந்தோம்பலும் என்னைக் கவர்ந்துவிட்டது. அதுவொரு மெய்சிலிர்க்கும் அனுபவம்” என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி.
கடந்த முறை ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காகச் சென்றபோது, கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாறுதலால், அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. இந்த முறை அது நிகழ்ந்துவிட்டதால், ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ருதி.