1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (17:45 IST)

தமிழில் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த ஷ்ரதா கபூர்

தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாது என பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் மறுத்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார் ஷ்ரதா கபூர்.

பிரபாஸ், ஷ்ரதா கபூர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் சாஹோ. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் பிரபாஸ், ஷ்ரதா கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஷ்ரதா கபூர் “சாஹோ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ஹீரோக்களுக்கு நிகரான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன். இதற்காக அடிப்பட்டு ரத்தமெல்லாம் சிந்தியிருக்கிறேன்.

இந்த படத்தில் நடிக்க நான் அதிகம் சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியானது. நான்கு மொழிகளில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்படும் படம் என்பதால் சம்பளமும் அதற்கு ஏற்றார் போல்தான் இருக்கும்.

தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் முன்னனி ஹீரோக்களுடன் டூயட்டுக்கு ஆடவும், படத்தை அலங்கரிக்கவும் மட்டுமே ஹீரோயின்கள் வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அந்த படங்களில் நடிக்கவில்லை. எனக்கு கதைதான் முக்கியம். எனக்கு பொருத்தமான கதை மற்றும் கதாப்பாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என கூறியுள்ளார்.