திரையரங்கு வாசலில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும்… ஆனால்? –இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள்!
தமிழ் சினிமாவில் தற்போது முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் என சொல்லப்படும் பொதுமக்களின் கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குகின்றன. அவை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கம் செலுத்துகின்றன. சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவான கங்குவா திரைப்படம் இரு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸான போது அதைக் காலி பண்ணியதில் இந்த விமர்சனங்கள் முக்கியப் பங்காற்றின.
இது சம்மந்தமாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் “தியேட்டர்களுக்கு யுடியூப் ரிவ்யூவர்களை நாமே அனுமதிப்பது நமது தொழிலை நாமே கெடுத்துக் கொள்வது போலதான். அவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். இரண்டு வாரங்களுக்கு எந்த படத்தின் விமர்சனங்களும் வரக்கூடாது” என சட்டம் கொண்டு வாருங்கள் என பேசினார். அதையடுத்து நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் யுடியூப் சேனல்களை திரையரங்குகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி “சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும். விமர்சனம் இல்லை என்றால் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கவனம் கிடைக்காமல் போய்விடும்” எனக் கூறியுள்ளார்.