வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:21 IST)

ஆரம்பகால ரஜினியை பார்த்தேன்: ‘வேட்டையன்’ படத்தை பாராட்டிய சீமான்..!

Seeman
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரம்ப கால ரஜினியை பார்த்தேன் என்று அவர் பாராட்டிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயனாக நடித்துள்ள #வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் கண்ணாடியாக வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
 
திரைக்கலை என்பது பொழுதுபோக்குவதற்கு அல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கு என்பதையும் தாண்டி, நாம் வாழும் சமூகத்தில் படர்ந்துள்ள பழுதை நீக்குவதற்கு என்பதை இத்திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள்.
 
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அன்புத்தம்பி ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றறிந்தபோதே சமூகத்திற்கு நற்கருத்தைப் போதிக்கும் திரைப்படமாக வேட்டையன் வெளிவரும் என்று தம்பி தமிழ்க்குமரனிடம் தெரிவித்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே சமூக அக்கறை கொண்ட ஆகச்சிறந்த திரைப்படமாக வேட்டையன் வெளிவந்துள்ளது.
 
நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்தும், போலி மோதல் கொலைகள் (Fake Encounter) மூலம் நீதியும், மனிதமும் ஒருசேர கொல்லப்படுவது குறித்தும் தொடர்ச்சியாகப் பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துகளைத் திரையில் கண்டது மிகுந்த பெருமிதமளிக்கிறது. இந்தியப் பெருநாட்டின் இரண்டு உச்ச நட்சத்திரங்களைக் கொண்டு தம்பி ஞானவேல் தன்னுடைய நேர்த்தியான படைப்பின் மூலம் தான் சொல்ல நினைத்த கருத்தை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 
மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் தன்னுடைய அறிமுகக் காட்சி முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் வழக்கம்போலக் காண்போரை பரவசப்படுத்துகிறார். தம்முடைய அனுபவமிக்க நடிப்பின் மூலம் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அதியனாகப் படத்தினைத் தாங்கி நிற்கிறார். ரஜினிகாந்திற்காகவே அமைக்கப்பட்ட இசை, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொன்றிலும் தம்முடைய கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார். அவருக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும். அண்மையில் வெளிவந்த ரஜினிகாந்த்  திரைப்படங்களிலேயே வேட்டையன் திரைப்படம் தனித்துவத்துடன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் படைப்பாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கானதாக மட்டுமில்லாமல் மக்கள் மனதில் மிக ஆழமான கருத்தை விதைக்கும் கலைப்படைப்பாக வெளிவந்துள்ள வேட்டையன் திரைப்படத்தினைப் போன்றே தொடர்ச்சியாகச் சமூக அக்கறைகொண்ட படங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
சாமானியனுக்கும் சரியான நீதி வழங்கப்பட வேண்டுமென்ற சட்டப்போராளியாக வரும் இந்திய திரை உலகின் பெரும் ஆளுமை நடிகர் அமிதாப்பச்சன், கம்பீரமான கதாபாத்திரத்தின் மூலம் உயர்ந்து நிற்கிறார்.
 
நறுக்கு தெறித்தாற்போன்ற திரைப்படத்தின் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சமூகத்தின் அவலத்தை சாடுகிறது.
 
தம்முடைய இயல்பான கலகலப்பான நடிப்பின் மூலம் ஃபகத் பாசில் வழக்கம்போல நம் நெஞ்சில் நிறைகிறார். சமூகக்கொடுமைகளைச் சட்டத்தின் முன் கொண்டுவரத்துடிக்கும் துணிவுமிக்கப் பெண்ணாக துஷாரா விஜயன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ள ராணா டகுபதி நடிப்பால் மிரட்டியுள்ளார். அவரைப்போன்றே படத்தில் வரும் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, கிஷோர், ரக்‌ஷன் உள்ளிட்ட அனைவருமே ஏற்ற பாத்திரங்களில் மிகசிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
தம்பி அனிருத்தின் இசை காட்சிக்கேற்றாற்போலக் கச்சிதமாகப் பொருந்தி படத்திற்கு வலிமை சேர்க்கிறது.  தம்பி ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பு விறுவிறுப்பான காட்சிகளை சற்றும் தொய்வில்லாமல் திரையில் தருகிறது.  
தம்பி எஸ்.ஆர்.கதிரின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவும், காட்சிக்கேற்ற ஒளிக்கலவையும் ஒன்றிணைந்து படத்தை மிகத்தரமான படைப்பாக மாற்றியிருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்புகளால் காட்சிகளோடு முழுவதுமாக ஒன்றச்செய்கிறார் கலை இயக்குநர் தம்பி சக்தி வெங்கட்ராஜ். அதிரடியான சண்டைக்காட்சிகளை அமைத்து  திரையுலகின் தொடக்ககால ரஜினிகாந்தை  நெஞ்சில் நிழலாட செய்துள்ளார்கள் சண்டை இயக்குநர்களான அன்புத்தம்பிகள் அன்பறிவு இரட்டையர்கள்.
 
சமூகச் சிந்தனைகொண்ட இப்படியொரு படத்தை இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களை வைத்து தயாரிக்க முன்வந்த லைகா நிறுவனத்தைச்சேர்ந்த அன்புத்தம்பிகள் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் தமிழ்க்குமரன் ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள்!
 
எல்லோருக்கும் ஒரே மாதிரியான சமமான, சரியான கல்வி தரப்படாதபோது, ஒரே மாதிரியான நீட் போன்ற சமூக அநீதியான கொடுந்தேர்வினைத் திணித்து, அதன் மூலம் கல்வியின் பெயரால் நடைபெறும் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையையும், மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்க அரசாங்கமே திட்டமிட்டு நடத்தும் போலி என்கவுன்டரால் சாகடிப்படும் நீதியையும், காவல்துறை தேடித்தேடி வேட்டையாடும் வேட்டையர்கள் அல்ல, அவர்கள் சமூகத்தைக் காக்கும் பாதுகாவலர்கள் என்பதையும் காட்சிகளால் உணர்த்தி ஆகச்சிறந்த படைப்பினைத் தந்துள்ள இயக்குநர் ஞானவேல் மற்றும் திரைப்படத்தில் பங்காற்றியுள்ள அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
 
சமூக அக்கறை கொண்ட வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
 
Edited by Siva