பேமிலி மேன் எதிர்ப்புகளுக்கு சமந்தாவின் ரிப்ளை!
சமந்தா நடித்துள்ள பேமிலி மேன் வெப் தொடருக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த தொடர் தீவிரவாதம் மற்றும் ரா புலனாய்வை மையமாக கொண்டது. இந்த தொடரின் முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த தொடர் பரவலான கவனத்தை இந்தியா முழுவதும் பெற்றது. அதனால் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. சீசன் 2 டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக(விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்திருக்கிறார்) சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையெல்லாம் தாண்டி தீவிரவாத தாக்குதல் எதுவுமே சமீபகாலங்களில் சென்னையில் நடக்காத நிலையில் சென்னையில் தொடர் குண்டுவெடிப்புகள் நடப்பது போல காட்சி அமைக்கப்பட்டு இருப்பது தமிழ் ரசிகர்களை மேலும் கோபமாக்கியுள்ளது. அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சமந்தா இந்த தொடரில் நடித்திருப்பது அவர் மீது கண்டனங்கள் விழ வழிவகுத்துள்ளது. இதனால் பலரும் இந்த தொடரை ஒளிபரப்பக் கூடாது என குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். முக்கியமாக நாம் தமிழர் கட்சி இதை வன்மையாக கண்டித்துள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை சம்மந்தமாக சமந்தா தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பொறுமையாக இருங்கள்… நம்பிக்கை வையுங்கள் எனக் கூறியுள்ளார்.