செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:07 IST)

ஓட்டுக்குப் பணமா?விழிப்புணர்வு தரும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு!!

அவனியாபுரம் மாசாணம் வழங்கும், இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம்  பாடல் “பொதுநலவாதி”. சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார், அவனியாபுரம் மாசாணம். 
 
தேர்தல் நேரத்தில் எங்கும் பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது.
 
மக்கள் இன்று ஓட்டுக்குப் பணம் வாங்கினால் நாளை அவர்கள் வாழ்வு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலமே  எப்படிப் பாதிக்கப்படும் என்பதை, அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான பாடலாக, பொது நலவாதி பாடல் உருவாகியுள்ளது. 
 
தேர்தல் நேரத்தில் எங்கும் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது.மக்கள் இன்று ஓட்டுக்குப் பணம் வாங்கினால் நாளை அவர்கள் வாழ்வு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலமே  எப்படிப் பாதிக்கப்படும் என்பதை, அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான பாடலாக, பொது நலவாதி பாடல் உருவாகியுள்ளது. 
 
இப்பாடலின் வெளியீட்டு விழா, சென்னையில்  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்.. 
 
இயக்குநர் மாசாணம் பேசியதாவது… 
 
பொது நலவாதி அதாவது யானையின் வலு அதற்குத் தெரியாது. பொதுவில் 100 கோடிக்குப் படம் செய்து விடலாம் ஆனால் அதன் மதிப்பு குறைவு தான்.  ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தின் மதிப்பு அதிகம் அது போல் ஓட்டுக்கு இருக்கும் மதிப்பு மக்களுக்குத் தெரியவில்லை.  ஓட்டின் மதிப்பு அறிந்து அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.
 
நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன்  பேசியதாவது… 
 
மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு  நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. 
 
மாசாணம்,  ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன்.
 
ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார்.
 
திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார்.
 
அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.
 
ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி. 
 
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர்  DSR சுபாஷ்  பேசியதாவது.. 
 
சுயநலவாதி வாழ்ந்து வரும் உலகில் பொது நலவாதி பாடலை உருவாக்கியிருக்கும் குழுவிற்கு வாழ்த்துக்கள். பாடலை உருவாக்கிய விதத்திற்காக இயக்குநரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். மக்கள் 500 ரூபாய்க்காக அடித்துக்கொள்ளும் போது, நாய் ரொட்டித்துண்டுக்கு அல்லாடும் காட்சி, பாடலில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழுத்தமாக அமைந்துள்ளது. ரியாஸ் இசையமைத்ததுடன் நடிக்கவும் செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், ஆண்டனி தாசன் அழகாகப் பாடியுள்ளார். 
 
பணம் சம்பாதிக்க ஓடும் திரையுலகில் மக்களுக்காகப் பணம் போட்டு இப்பாடலை உருவாக்கியிருக்கும்  குழுவிற்கு வாழ்த்துக்கள். 500 ரூபாய் கொடுத்து ஓட்டுப்போட்டால் 5 வருடத்திற்கு உங்களுக்குக் கிடைப்பது ஒரு நாளுக்கு 29 காசுகள் தான் அதை வைத்து உங்களால் பப்ளிக் டாய்லெட் கூட போக முடியாது.  பணம் வாங்கி விட்டால் உங்களால் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க முடியாது . ஓட்டுக்குக் காசு வாங்கி இப்படி ஒரு கேவலமான வாழ்வு வாங்க வேண்டுமா? என யோசியுங்கள். அதே போல் எப்போதும் 60 சதவீதம் ஓட்டு தான் பதிவாகிறது, அதில் ஜெயித்து வருபவர்கள் 100 சதவீத மக்களை ஆள்கிறார்கள் இதையும் யோசிக்க வேண்டும். ஓட்டு போடாதவர்கள் ஏன் ஓட்டுப்போடவில்லை என பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.  இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, ஆட்டோவிற்கே நன்றாக இருக்கிறதா? என சோதிக்கிறார்கள். அது போல், அரசியல்வாதிகளுக்கும் அந்த முறையைக் கொண்டு வரவேண்டும். ஓட்டுக்குப் பணம் வாங்கும் முன் அனைவரும் யோசிக்க வேண்டும் அருமையான விசயத்தைச் சொல்லியிருக்கும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். 
 இசையமைப்பாளர் ரியாஸ் கதிர் பேசியதாவது.. 
 
இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று இந்த விழாவிற்காக நானும் மாசாணமும் ஆட்டோவில் வரும் போது ஆட்டோக்காரரிடம் "நீங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குகிறீர்களா? எனக்  கேட்க, ஆமா சார் கண்டிப்பாக வாங்குவேன் என்றார்.  
 
அப்போ யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ? என்றால் யார் அதிகமாகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன் என்றார்." இந்த நிலை எல்லா இடத்திலும் இருக்கிறது. இதனை முழுமையாக மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த பாடல் பார்த்து, ஒரு சிலராவது திருந்தினால் அது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவோம்,   அனைவருக்கும் நன்றி. 
 
மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி பேசியதாவது... 
 
தேர்தல் நேரத்தில் மக்களுக்குத் தேவையான செய்தியைச் சொல்லும் பாடலாக இப்பாடலை உருவாகியுள்ளனர். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, ஒவ்வொரு முறையும் தேர்தலில் காசு வாங்காமல் ஓட்டு போடுங்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் மக்கள் திருந்துவதாக இல்லை. ஒரு நல்லவனை ஐயோ பாவம் நல்லவன் என்கிறோம், ஆனால் ஒரு கிரிமினலை அவன் கில்லாடி என்கிறோம். பணம் கொடுக்கும் பழக்கம் ஓட்டுக்கு மட்டுமல்லாமல், எல்லா இடத்திலும் இருக்கிறது. அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்து வேலை வாங்குவது இன்று சகஜமாகிவிட்டது. பணம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்தால், அவன் பணம் வாங்கினாலும் நன்றாக வேலை செய்கிறான் என்று சொல்கிறார்கள். இந்த பழக்கம் மாற வேண்டும். அதன் முதல் படியாக விழிப்புணர்வு தரும் வகையில் இப்பாடலை எடுத்துள்ளார்கள். மக்களுக்காக உருவாகியுள்ள இப்பாடலைப் பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.  
 
திரைப்பட தயாரிப்பாளர் வி சி குகநாதன் பேசியதாவது… 
 
அனைவருக்கும் வணக்கம், நான் வந்ததற்கான காரணம், இங்கு என்னை அழைத்தவர்களுக்கும் எனக்கும் உறவு மட்டுமல்ல,  தமிழும்  உணர்வாக இருக்கிறது. தமிழுக்காக 17 வயதில் உயிரை விடத் துணிந்த இளைஞன் நான். இந்த வயதிலும் அதைத்தான் பேசுகிறேன். நான் இந்தியாவின் 9  மொழிகளில் முன்னூறு படங்களைத் தாண்டிப் பணியாற்றிவிட்டேன். இப்போது ஓய்வாக இருக்க வேண்டிய வயது. ஆனால் நாம் வாழ்ந்த சமூகம் இப்போது எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களுக்கானது ஆனால் ஜனநாயகத்தில் மக்களே தவறு செய்தால் என்ன செய்வது. மக்களால் மக்களுக்காக எனும் இந்நாட்டில், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?.  விவசாயிகளுக்கு எதிரான சட்டம், உழைப்பாளிகளுக்கான எதிரான சட்டம், என நாடு போய்க்கொண்டிருக்கிறது. இப்போது மொபைலில் வரும் வீடியோவில், அரசியல்வாதிகள் ஆரத்தி எடுக்கும் மக்களுக்குப் பணம் கொடுக்கும் வீடியோ வலம் வருகிறது. மக்கள் பணம் வாங்கினால் என்ன அர்த்தம். கொடுக்கும் ஆட்களை நீங்களே தூண்டி விடுகிறீர்கள் என அர்த்தம். இது எங்குக் கொண்டு போய் விடும். உங்களுக்கு லஞ்சம் தர அரசியல்வாதிகளை ஊழல் செய்யத் தூண்டுகிறீர்கள்.  இந்தப்பணத்தை நாங்கள் வாங்க மாட்டோம் எனத் தைரியமாக சொல்வீர்களானால், 71/2 கோடி தமிழர்களும் சொல்வீர்களானால்,  இந்திய மக்கள் அனைவரும் சொல்வீர்களானால், இந்தியாவின்  140 கோடி மக்களும் என் பக்கம் என எவரும் சொல்ல முடியாது. இதைத்தான் எம் ஜி ஆர், கலைஞர், ஜெயலலிதா என அனைவரும் சொன்னார்கள். ஆனால் இன்று  அரசியல்வாதிகள் இப்படி ஆன காரணம் என்ன ? மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தப்பாட்டை எடுத்த கலைஞர்கள் அதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறார்கள். அடுத்து இலவசம் வாங்கக் கூடாது இலவசம் வேண்டாம் என்ற கருத்தையும் சொல்லும்படியான பாடலை எடுக்க வேண்டும். என்ன நடக்கிறது ஓட்டுக்குப்பணம் கொடுத்து ஆட்சிக்கு வருகிறார்கள், ஒரு ஆளுக்கு நாளுக்கு 29 பைசா தான் தருவதாகச் சொல்கிறார் சுபாஷ். ஆனால் ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகள் 29 கோடி தினமும் வீட்டுக்குக் கொண்டு போகிறார்களே ?. அதற்கு என்ன செய்வது. 
 
மக்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குவதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மக்களுக்குப் பணம் லஞ்சம் கொடுக்க, ஊழல் செய்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள். இதைத்தான் இந்தப்பாடல் சொல்கிறது. இதை அரசாங்கம் அல்லவா வெளியிட வேண்டும் ஆனால் வெளியிட மாட்டார்கள். இன்னும் அரசியலில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் ஜெயிக்க வேண்டுமெனில் நாம் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகத்தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் மக்கள். அரசியல்வாதிகள் காரணம் அல்ல அரசும் காரணம் அல்ல, மக்கள் அவர்கள் தான் திருந்த வேண்டும். பணம் வாங்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும் அதைத்தான் மாசாணம் சொல்லியிருக்கிறார், அதை நாம் அனைவருக்கும் சொல்வோம் நன்றி.