1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (13:49 IST)

சமரசப் பேச்சு வெற்றி - 18ஆம் தேதி தெனாலிராமன் வெளியாகிறது

தெலுங்கு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் திட்டமிட்டபடி வடிவேலுவின் தெனாலிராமன் படம் ஏப்ரல் 18 திரைக்கு வருகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரப் போகிற படம் தெனாலிராமன். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்கம். இந்தப் படம் பிரமாண்டமாக வெளியாக வேண்டும் என்று வடிவேலு விரும்பினார். முக்கியமாக எந்தப் பிரச்சனையிலும் படம் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 
 
ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் தெலுங்கு அமைப்புகள் படத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கின. கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் இழிவுப்படுத்தி காட்சிகள் வைத்துள்ளனர். படம் வெளியானால் அது தெலுங்கு பேசும் மக்களை வேதனைப்படுத்தும் என்று கூறி படத்தை தடை செய்ய மனு அளித்தனர். வழக்கும் தொடரப்பட்டது. மேலும், வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முயன்றனர்.
 

இந்த விவகாரத்தில் வடிவேலுக்கு ஆதரவாக சீமான், வ.கௌதமன், பாரதிராஜா உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர். தெலுங்கு அமைப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரித்தனர். இந்நிலையில் தெனாலிராமனில் வரலாறை திரித்து எடுத்துள்ளனர் என்ற வாதத்துடன், படத்தை தடை செய்ய கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
என்றாலும் கடைசி நேர சர்ச்சைகளை தவிர்க்க தயாரிப்பாளர் தரப்பு தெலுங்கு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சமரசப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெலுங்கு அமைப்புகள் சமாதானமடைந்ததாகவும், திட்டமிட்டபடி படம் 18 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
 
(உண்மையில் வடிவேலுக்கு கிடைத்த ஆதரவும், தெனாலிராமனை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் தெலுங்கு அமைப்புகளுக்கு இனிமா தந்த மாதிரி ஆகிவிட்டது. இதற்கு மேலும் தடை என்று பேசினால் பேஸ்மெண்டோடு சேர்த்து தங்களின் பில்டிங்கும் ஆட்டம் காணும் என்பதால் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தை கைவிட்டன என்பதே  நிஜம்)