கேம்சேஞர் படத்தால் பெரிய நட்டம்… தயாரிப்பாளருக்குக் கைகொடுக்கும் ராம்சரண்!
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவே ரசிகர்களால் கேலி செய்யப்பட்டது. ஏனென்றால் படம் அந்தளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்பட்டது. அதன் பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் கேம்சேஞ்சர் லாபமீட்டும் படமாக அமையுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தில் ராஜுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக ராம்சரண் மீண்டும் அவருக்கு ஒரு படம் பண்ணித் தர ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்காக அவர் குறைவான சம்பளம் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.