ராஜ டரியலுடன் தொடங்கும் வடிவேலு படம்
வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங், இன்று முதல் தொடங்கியுள்ளது.
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் வடிவேலு. சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், 11 வருடங்கள் கழித்து தற்போது தயாராகிறது.
‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஷங்கர் தயாரிக்கிறார். சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில், வடிவேலு எத்தனை கேரக்டர்களில் நடிக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. முதல் பாகத்துக்கு சபேஷ் – முரளி இசை அமைத்திருந்தனர். ஆனால், இரண்டாம் பாகத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், பிரம்மாண்டமான செட் அமைத்துள்ளார். ராஜ டரியலுடன் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.