புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (14:34 IST)

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் 'ஜெய்பீம்', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக  நடித்திருக்கிறார்.
 
பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன்,  அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 
 
இதனை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர். 
 
மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் அவரது முதல் படமான ‘கால்ஸ்’ (calls) கடந்த கோவிட் காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது. அதே சமயம் இப்போது வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்த படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அதுமட்டுமல்ல அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
 
தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது.
 
‘பரமன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள இயக்குநர்கள் பலரும், குறிப்பாக இயக்குநர் சீமான் இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி தங்களது பாராட்டுகளைத்  தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.