6500 திரையரங்குகளில் சாதனை படைக்கவிருக்கும் பாகுபலி 2!
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் பாகுபலி 2. இதனை இயக்கியவர் ராஜமெளலி.
பாகுபலி முதல் பாகம் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்தது. தற்போது பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நான்கு மொழிகளிலும் சேர்த்து யூடியூப் இணையத்தளத்தில் 6.50 கோடி தடவை பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கப்பட்டது. அதேபோல முதல் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக தடவை பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்தும் சாதனை செய்துள்ளது. இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படத்தின் டிரெய்லரும் இத்தகையை எண்ணிக்கையை எட்டியதில்லையாம்.
இந்நிலையில் பாகுபலி 2 படம், இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. எனவே ஏப்ரல் 28 அன்று ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.