‘மெர்சல்’ பெயரை யாரும் பயன்படுத்த முடியாது
‘மெர்சல்’ என்ற பெயருக்கு தயாரிப்பு நிறுவனம் ட்ரேட் மார்க் வாங்கியுள்ளதால், அந்தப் பெயரை யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பெயருக்கு, ட்ரேட் மார்க் வாங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி படத்தின் தலைப்புக்கு ட்ரேட் மார்க் வாங்கியதில்லை. முதன்முதலாக அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது ‘மெர்சல்’.
’மெர்சல்’ என்பது பொதுப்பெயர் தானே? அதற்கு எப்படி ட்ரேட் மார்க் கொடுத்தார்கள் என்ற கேள்வி எழலாம். புதிதாக ஒரு பொருள் சந்தைக்கு அறிமுகமாகும்போது, அந்தப் பொருளின் பெயருக்கு ட்ரேட் மார்க் வாங்குவார்கள். சினிமா என்பதும் ஒரு படைப்புதான் என்ற கருத்தை எடுத்துக்கூறி ட்ரேட் மார்க் வாங்கியிருக்கிறார்கள்.
எனவே, இனிமேல் ‘மெர்சல்’ பெயரை கமர்ஷியலாகப் பயன்படுத்துவதாக இருந்தால், கிடைக்கும் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ராயல்டியாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தரவேண்டும். உதாரணமாக, ‘மெர்சல் பபுள்கம்’, ‘மெர்சல் டி-ஷர்ட்’ என்று பயன்படுத்தினால் ராயல்டி தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.