வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2017 (18:34 IST)

நான் எவ்வளவு பெரிய முட்டாள்? - இளம் இயக்குனரின் மனக்குமுறல்

நடிகர் சத்யராஜை வைத்து வெங்காயம் என்ற படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் என்ற இளம் இயக்குனர், நெடும்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி அதை வெளியிட முடியாமல் திணறி வருகிறார். 


 

 
இந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவு பலரின் மனதையும் கலங்கடித்திருக்கிறது.
 
நெடும்பா திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது,முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது,அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது.இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் வெங்காயம் திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்னறை ஆண்டுகள் கடந்து விட்டது.
 
அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்தபோது உயர்மதிப்பு நோட்டு பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளால் தொடர்ச்சியாக தள்ளி போய்கொண்டே இருந்தது.அதற்காக காத்திருந்த நாட்களை ஒன் படத்திற்காக செலவிட்டு சரி செய்து கொண்டிருந்தேன் நெடும்பா படத்திற்கான உழைப்பு மிகக்கடுமையானது. 500 ஆண்டுகளாக வெளியுலக மக்களை பார்க்காத ஒரு இனம் பற்றிய கதை. 


 

 
தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான மலை கிராமங்களுக்கு பயனித்து,ஆயிரக்கனக்கான பழங்குடி மக்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டு எழுதப்பட்ட கதை திரைக்கதை.பல வேற்று மொழிப்படங்களையும் பார்த்தோம் எதற்கென்றால், எந்த இடத்திலும் மற்ற படங்களின் சாயல் எதேச்சையாக கூட வந்துவிடக்கூடாது என்பதற்க்காக..கிட்டத்தட்ட 300 பேரின் கடின உழைப்பு.
 
இந்த தாமதத்திற்க்கான முழு காரணம் நான் தான்,ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்க்கு எந்த வித தகுதியும் இல்லாத நான் இதை தயாரித்திருக்க கூடாது. கருத்து,கதையமைப்பு,காட்சியமைப்பு, என சிந்தித்து கொண்டிருந்த என்னை கடன்,வட்டி,தவணை, என சிந்திக்க வைத்து சிதைத்துக்கொண்டிருக்கிறது இந்தப்படம்.
 
இது நான் தயாரிக்கும் கடைசி படம்.யாராவது என்னை கடத்தி கொண்டு போய் வைத்து என் உடல் முழுக்க வெடிகுண்டை சுற்றி வைத்து அதன் ரிமோட்டை கையில் வைத்து கொண்டு , அடுத்த படமும் உன் சொந்த தயாரிப்பில் தான் செய்ய வேண்டும் இல்லையென்றால் பட்டனை அமுக்கி விடுவேன் என்று சொன்னால்,அந்த ரிமோட்டை பிடுங்கி நானே அமுக்கிக்கொண்டு செத்து விடுவேன்.
 
இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான ஒரு படத்திற்க்கு சேலம் ஏரியாவில் மட்டும் 25 செண்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டிருக்கிறது. அதே போல் தான் தமிழகம் முழுவதும்.அந்த படத்தின் பெயர் “பச்சைக்கிளி கனகா”.பேசாமல் பெயரை மாற்றிக்கொண்டு அப்படி ஒரு படத்தை எடுத்து பிரச்சனைகளை தீர்த்துவிடலாமா என்று கூட யோசித்துவிட்டேன். 


 

 
சமீபத்தில் பத்திரிக்கைகளின் பாராட்டை பெற்ற நிசப்தம் படம் ஹோப் படத்தின் தமிழ் வடிவம் என தெரிந்த போது, ஒரு படத்திற்காக நாம் எவ்வளவு முட்டாள் தனமாக உழைத்திருக்கிறோம் என நினைக்கும் போது ஒரு விரக்தி ஏற்படுகிறது. அலம்பல்களை ரசிக்க பழகிய மக்கள் மத்தியில் புலம்பல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்வேன். இன்று வரை வெளியீடு தொடர்பான போராட்டம் தொடர்கிறது.
 
சமீபத்தில் இதே களம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.பெரிய நடிகர்கள்,பெரிய பட்ஜெட்,பெரிய விளம்பரம் செய்யபடும் அந்த படங்கள் இரண்டு வருடமாக போராடிக்கொண்டிருக்கும் நெடும்பாவிற்கு முன்னதாகக்கூட வெளியிடப்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு பிறகு நெடும்பா வருமேயானால் “இதே மாதிரி ஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு” என்றோ அல்லது “அந்த படத்த பாத்து காப்பி அடிச்சுருக்கான்” என்றோ நீங்கள் கமெண்ட் அடித்து விட்டு போகும் தருவாயில், நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.