கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்துக்காக மம்மூட்டி 100 நாட்களும் மோகன்லால் 30 நாட்களும் தேதிகளை ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் இளவயது டி ஏஜிங் காட்சிகள் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் தொடங்கியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சக்கா போபன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. இந்த படத்துக்குத் தற்காலிகமாக மெகாஸ்டார் 429 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் கதை சில ஆண்டுகளுக்கு முன்னர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனை வைத்து இயக்க இருந்த கதைதான் என சொல்லப்படுகிறது. மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 150 நாட்கள் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.