திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : புதன், 15 மே 2024 (13:23 IST)

தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல.! தமிழர் மாண்பு குறைந்து விட்டதா.? ஜி.வி பிரகாஷ் ஆதங்கம்..!!

GV Prakash
பாடகி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், சோசியல் மீடியாவில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜிவி பிரகாஷ், ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பின்னணி பாடகி சைந்தவியும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் இணைந்து சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடினர். இந்த ஜோடிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அன்வி என பெயரிட்டுள்ளனர்.
 
கடந்த சில மாதங்களாக ஜிவி பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அண்மையில் சமூக வலைதளம் வாயிலாக இருவரும் அறிவித்தனர். 
 
விவாகரத்துக்கான காரணத்தை அவர்கள் வெளியிடாததால் பல்வேறு தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவின. இந்த நிலையில், தன்னைப்பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தன்னை மிகவும் காயப்படுத்துவதாக  ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல என்றும் தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது 'யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? என்றும் ஜிவி பிரகாஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் என்றும் தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.