கடைசி நேரத்தில் ஆஸ்கர் ரேஸில் இணைந்த காந்தாரா!
காந்தாரா திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைக் குவித்து வசூல் சாதனைப் படைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு காந்தாரா படத்தை அனுப்பியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் காந்தாரா படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.