வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (11:16 IST)

நான் இன்னும் அனிருத் ரசிகனாகவில்லை… இந்தியன் 2 மேடையில் கமல் பேச்சு!

கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல படத்தின் பாடல்களும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. முதல் பாகத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்திருந்தார். அதில் ஒரு செவ்வியல் தன்மை இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்துக்கு அனிருத் கொடுத்துள்ள பாடல்கள் வெறும் ஓசைக் குவியல்களாக உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் ஏன் அனிருத் பயன்படுத்தப்பட்டார் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். அதில் “இந்த முடிவு இயக்குனர் ஷங்கர் எடுத்த முடிவு. ஆனால் என்னைக் கேட்டால் நான் இளையராஜா மற்றும் ரஹ்மானின் ரசிகன். இளையராஜா இசையை 40 ஆண்டுகளாகவும், ரஹ்மான் இசையை 30 ஆண்டுகளாகவும் கேட்டு வருகிறேன். அனிருத் இப்போது வந்துள்ளார். கூடிய விரைவிலேயே நான் அவருக்கும் ரசிகன் ஆவேன் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.