1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 30 ஜூலை 2016 (18:19 IST)

’வைரமுத்துவின் மனதில் உள்ளது வாய் வழியே வந்துள்ளது’ - தாணு

வைரமுத்துவின் மனது என்ன நினைத்ததோ அதுதான் வாய் வழியாக வந்துள்ளதாக நான் கருதுகிறேன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
 

 
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ”கபாலி” திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
 
கபாலி படம் தலித் மக்களைப் பற்றி பேசுகிறது என்று படத்தின் அரசியல் தன்மை ஒருபுறமும், சாரு நிவேதிதா, மிஷ்கின், சமுத்திரகனி போன்றோரின் விமர்சனம் ஒரு பக்கமும், ரஞ்சித் மீதான விமர்சனம் ஒருபுறமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
 
இதற்கிடையில் தோல்வியடைந்துவிட்டதாக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்து இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வைரமுத்து, “அரிமா சங்கத்துகாரர்களே இப்படித்தான். குளிக்கும்போது கூட கோர்ட் போடுவார்கள்.
 
நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும். இந்த கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, குழந்தையை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை, எல்லாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியிருந்தார்.
 
பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து, “நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி வெற்றி தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது” என்று தன்னிலை விளக்கம் அளித்து இருந்தார்.
 
 
இந்நிலையில், இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டபோது, ”அகத்தில் இருந்தது புறத்தில் தெரிந்தது. அவருடைய மனது என்ன நினைத்ததோ அதுதான் வாய் வழியாக வந்துள்ளதாக நான் கருதுகிறேன். அவர் விமர்சிக்கலாம், அவரை நாங்கள் விமர்சிக்க தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.