வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (15:19 IST)

இசையமைப்பாளரைக் கண்டுபிடித்தால் தங்க காசு பரிசு… அறிவித்த தயாரிப்பாளர்!

ஜெண்டில் மேன் 2 படத்தை இப்போது தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

அதுமட்டுமில்லாமல் அவர் அதன் பிறகு தயாரித்த எல்லா படங்களுமே அதிக பட்ஜெட் படங்கள்தான். ஒரு கட்டத்தில் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த கோடீஸ்வரன் என்ற பெயரில் இமாலய பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி, அது பாதியிலேயே நின்றதால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் ஷங்கருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்த குஞ்சுமோனுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.

இதனால் நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் ‘ஜெண்டில் மேன் 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்று கண்டுபிடிக்கும் 3 ரசிகர்களுக்கு தங்கக் காசு பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.