அஜித்தால் அவஸ்தைப்படும் அண்ணாச்சி
அஜித்தின் அடுத்த படம் பற்றி சொன்ன தகவலால் அவஸ்தைக்கு உள்ளாகியிருக்கிறார் இமான் அண்ணாச்சி.
‘விவேகம்’ படம் விரைவில் ரிலீஸாக இருப்பதால், அந்தப் படத்தின் கெட்டப்பில் அஜித்துக்கு ஒரு சிலை செய்திருந்தனர் கும்பகோணம் ரசிகர்கள். அந்தச் சிலையை, இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசியவர், “இதுவரை அஜித்துடன் சேர்ந்து நடித்ததில்லை. ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் சிலையைத் திறந்து வைத்தேன். அடுத்ததாக, அஜித் – சிவா இணையும் படத்திலோ அல்லது வேறொரு அஜித் படத்திலோ நடிக்க வாய்ப்பிருக்கிறது” என்றார்.
இதனால், மறுபடியும் அஜித்தை இயக்கப் போகிறார் சிவா என ஊடகங்கள் எழுத, அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறார் அண்ணாச்சி. “இந்தச் செய்தியை அஜித்தோ, சிவாவே கேள்விப்பட்டால், தவறான தகவலைப் பரப்பியதாக என்னை நினைப்பார்கள். அஜித் சிலையைத் திறக்கப்போய் இப்படி சிக்கலுக்கு ஆளாகிவிட்டேனே…” என்று புலம்பி வருகிறாராம் இமான் அண்ணாச்சி.