1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (22:25 IST)

நானும் விஜய்சேதுபதியும் ஒண்ணுமில்லாதவங்க: இளையராஜா

இசைஞானி இளையராஜா தாம்பரம் அருகேயுள்ள சாய் பொறியியல் கல்லூரியில் நடந்த ஒரு  விழாவில் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் மாணவர்களுக்கு பல அறிவுரைகளை கூறியதோடு, கனவு காணுங்கள் என்ற அப்துல்கலாமின் அறிவுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.



 
 
இளையராஜா இந்த விழாவில் பேசியதாவது: விஜய்சேதுபதி நல்ல நடிகர் மட்டுமல்ல, அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படங்களை அவரே தயாரித்தும்  வருகிறார். இந்த கல்லூரி எப்படி ஏழை மாணவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு கல்வி வழங்குகிறதோ, அதேபோல் விஜய்சேதுபதியும் புதியதாக திரையுலகிற்கு வரும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 
 
விஜய்சேதுபதியும், நானும் ஒன்றும் இல்லாமல் சென்னைக்கு வந்தவர்கள். இன்று நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கின்றோம். அப்படிப்பட்டவர்களுக்கு தான் திறந்த மனதும் இருக்கும். இந்த திறந்த மனது மாணவர்களாகிய உங்களுக்கும் இருக்க வேண்டும். 
 
இந்த வயதில் என்னென்ன சாதிக்க வேண்டுமோ அத்தனையையும் சாதித்துவிடுங்கள். ஆனால் கனவு காணுங்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கனவு காணும் நேரத்தில், கனவு காண்பவன் பொய், காண்கின்ற கனவு பொய், அதை அறிகின்ற அறிவு பொய். நிஜமான நிகழ்வுகளே சில சமயம் கனவுபோல் போய்விடுகின்றது. எனவே கனவு காண்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் எதுவாக ஆக விரும்புகின்றீர்களோ, அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைத்தால், நான் இசையமைப்பாளர் ஆனது போல் நீங்களும் ஒருநாள் நிச்சயம் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய முடியும்' 
 
இவ்வாறு இளையராஜா பேசினார்