இளையராஜாவோடு இசையமைப்பு பணிகளை தொடங்கிய பாரதிராஜா… மார்கழி திங்கள் அப்டேட்!
தாஜ்மஹால் படத்தின் மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் கதாநாயகனாக வரமுடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனர் ஆகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்போது இளையராஜா இந்த படத்துக்கான இசையமைப்புப் பணிகளை தொடங்கியுள்ளார். பாரதிராஜா, இளையராஜா மற்றும் மனோஜ் பாரதி ஆகியோர் இசையமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.