செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (17:45 IST)

என்னாலேயே அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையே- நடிகர் பார்த்திபன்

parthiban
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா  இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய் ஆண்டனி குடும்பத்தாருக்கு தமிழ் சினிமாத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும்  நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த   நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு நடிகர் பார்த்திபன் தன் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

அதில்,

‘’நண்பர் விஜய் ஆண்டனி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில்  ஆறுதல் அளிக்க  எந்த வார்த்தைக்கும் ஆற்றல் இல்லை. இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையாக என்னை நான் சமாதானப்படுத்திக்க இயலாமலே இப்பதிவு.

இன்னும் ஐஸ்க்ரீம் ஆசைகளே தீராத ஒரு குழந்தை தன் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளத் துணிந்தால் அந்த பிஞ்சு மனம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.இன்றைய சமூகச்  சூழல் மன அழுத்தத்தைக் அதிகரிக்க ஏதுவாகவே உள்ளது. தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் பாடலில் மீண்டும் அவ்வரிகளை வலியத் திணித்திருக்கிறேன்

‘வாழ்ந்து என்ன செய்ய போகிறோம் செத்துத் தொலையலாமே, செத்து தான் என்ன செய்யப் போகிறோம் வாழ்ந்தேத் தொலையலாமே’தற்கொலை தீர்வல்ல என்ற மனோதிடத்தை குழந்தை பருவத்திலேயே  எப்பாடு பட்டாவது விதைக்க வேண்டும்.

விஜய் ஆண்டனி அவரது மனைவி இருவருமே அன்பும் பண்பும் நிறைந்தவர்கள். தங்களின் உலகத்தையே இழந்தவர்களின் முகத்தை பார்த்து என்ன ஆறுதல் சொல்வது முதலில் எப்படி அக்கொடுமையை பார்ப்பேன்.?

பெற்றவர்களும் மற்றவர்களும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் குழந்தைகள் என்று வந்துவிட்டால் எல்லா குழந்தைகளும் என் குழந்தைகளே.

எனவே… என்னாலேயே அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையே ,

அவர்களால் மட்டும் எப்படி?’’ என்று தெரிவித்துளார்.