1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam
Last Updated : புதன், 31 மே 2017 (16:01 IST)

சங்கமித்ராவில் ஸ்ருதி ஹாசனுக்குப் பதில் ஹன்சிகா?

'சங்கமித்ரா’ படத்தில், ஸ்ருதிக்குப் பதில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதற்காக தனி பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றுக் கொண்டார் ஸ்ருதி. சில நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட ‘சங்கமித்ரா’ குழுவுடன் ஸ்ருதியும் கலந்து கொண்டார்.
 
ஆனால், படத்தில் இருந்து அவரை நீக்குவதாக ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் திடீரென அறிவித்தது. எனவே, ஹீரோயினாக யார் நடிக்கலாம் என்ற விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், ஹன்சிகாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’, ‘ஆம்பள’ என சுந்தர்.சி.யின் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் ஹன்சிகா. அத்துடன், ‘புலி’ படத்திலும் இளவரசியாக நடித்துள்ளார். எனவே, ஹன்சிகாவே ‘சங்கமித்ரா’வாக நடிக்கலாம் என்கிறார்கள்.