அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் – அசத்தும் துல்கர் சல்மான்
மலையாள நடிகரான துல்கர் சல்மான், தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்.
‘ஓ காதல் கண்மணி’க்குப் பிறகு, தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘சோலோ’ படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தன்ஷிகா நடித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்திலேயே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது, நடிகையர் திலகர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார் துல்கர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தமிழில் மட்டுமே உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘99’ என்ற குறும்படத்திற்காக விருதுபெற்ற தேசிங் பெரியசாமி, இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘குற்றம் 23’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாஸ்கரன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, ரா.கார்த்திக் இயக்கத்தில் 4 ஹீரோயின்களுடன் நடிக்க உள்ளார் துல்கர் சல்மான்.