திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (13:33 IST)

கோயிலில் வைத்து நடிகைக்கு முத்தம் கொடுத்த ஆதிபுருஷ் இயக்குனர்… வலுக்கும் கண்டனம்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார்.  சீதாவாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று ஆந்திராவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அடுத்த நாள் திருப்பதி தேவஸ்தானத்து சென்று வழிபட்டனர்.

அப்போது கோயிலில் இருந்து கிளம்பிய கீர்த்தி சனோனை வழியனுப்பும் விதமாக ஓம் ராவத் அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் பரவ, இப்போது ஓம் ராவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆந்திர மாநில பாஜக தலைவர் ரமேஷ் நாயுடு “உங்கள் முட்டாளதனமான செயல்களை கோயில் போன்ற புனிதமான இடத்துக்குள் எடுத்து வராதீர்கள். கோயிலுக்குள் கட்டியணைப்பது மற்றும் முத்தம் கொடுப்பது எல்லாம் மரியாதைக் குறைவான ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும்” எனக் கூறியுள்ளார்.