ஏ ஆர் ரஹ்மான் பத்தி நான் எது சொன்னாலும் தப்பாகி விடுகிறது… இயக்குனர் அமீர் கருத்து!
கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.
அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார். மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் அமீர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பற்றி பேசியுள்ள கருத்து ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய அமீர் ஏ ஆர் ரஹ்மான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார் எனக் கூறியிருந்தார். அதுபற்றி இப்போது விளக்கமளித்துள்ள அமீர் “நான் ரஹ்மான் பற்றி எது பேசினாலும் அது தப்பாகிவிடுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஹ்மான் இசையமைக்கும் படம் எல்லாம் சர்வதேச அங்கிகாரம் பெறும். ஆனால் எல்லாமே பெரிய பட்ஜெட் படங்கள். அதே போல காதல், ஆட்டோகிராப் போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தால் அவையும் கவனம் பெற்றிருக்கும்” எனக் கூறியுள்ளார்.