தேவயானி இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது!
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். அப்போது அவரை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். அதனால் பல ஆண்டுகள் அவர்கள் பெற்றோருடன் பேசாமல் வாழ்ந்து வந்தார்.
அதன் பிறகு சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் கவனம் செலுத்தினார். அவர் நடித்த கோலங்கள் சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவானார்.
இந்நிலையில் இப்போது தேவயானி கைக்குட்டை ராணி என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த குறும்படத்துக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. தாயில்லாமல் தந்தையோடு வாழும் சிறுமி ஒருவரின் வாழ்க்கையை ஒட்டியதாக இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.