1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 11 ஜூலை 2015 (10:48 IST)

சூடு ஆறாத ஜிகிர்தண்டா - கார்த்திக் சுப்பாராஜ் மீது மானநஷ்ட வழக்கு

ஜிகிர்தண்டா படம் வெளியாகும் முன்பே அதன் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் தரமுடியும் இல்லையென்றால் யுஏ சான்றிதழ்தான் தருவோம் என தணிக்கைக்குழு கூறியது.
 
யுஏ சான்றிதழ் கிடைத்தால் 30 சதவீத வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்பதால் தணிக்கைக்குழு சொன்ன காட்சிகளை நீக்கச் சொன்னார் கதிரேசன். அவை படத்துக்கு மிகத்தேவையான காட்சிகள் என்று கூறி காட்சியை நீக்க மறுத்தார் கார்த்திக் சுப்பராஜ். படம் காட்சிகள் நீக்கப்படாமல் யுஏ சான்றிதழுடனே வெளியானது.
 
மேற்படி விவகாரத்தில் படத்தின் நாயகன் சித்தார்த் உள்பட படக்குழு கார்த்திக் சுப்பாராஜ் பக்கம் நின்றது. அதனால், பட வெளியீடு தள்ளிப் போனதை கதிரேசன் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அதனை ஒரு குற்றச்சாட்டாக கார்த்திக் சுப்பாராஜும், சித்தார்த்தும் முன் வைத்தனர். படம் 50 வது நாளை கடந்தபோது, வேண்டுமென்றே ஒரு போஸ்டர்கூட வெளியிடவில்லை என கதிரேசன் மீது கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் குற்றம்சாட்டினார். 
 
சமீபத்தில், படத்தின் இந்தி உரிமையை எனக்குத் தெரியாமல் விற்கப் பார்க்கிறார் என வழக்கு தொடர்ந்து இந்தி உரிமையை விற்பனை செய்ய தடையும் வாங்கினார் கார்த்திக் சுப்பராஜ்.
 
இந்நிலையில், கதிரேசனின் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
ஜிகர்தண்டா திரைப்படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜ், அதன் தயாரிப்பாளர் கதிரேசன் மீது சென்னை ஐகோர்ட்டில் திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், திரைப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும் அந்த வகையில் தனக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி மற்றும் நஷ்டஈடாக ரூ.40 லட்சம் கோரி வழக்கு செய்திருக்கிறார். 
 
இந்தி மொழி உள்பட வேறு மொழிமாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவும் வாங்கியிருந்தார். இந்த தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். அதில் தடை உத்தரவை நீக்கக்கோரி கேட்டுக்கொண்டிருந்தார். 
 
ஜிகர்தண்டா படம் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. வேண்டுமென்றே, டைரக்டர் படப்பிடிப்பினை தாமதப்படுத்திய வகையில் ஏறத்தாழ ரூ.1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், கார்த்திக் சுப்பாராஜ் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறாகவும், எங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் செய்திகள் பரப்பியதால் இன்றுவரை தெலுங்கு டப்பிங் உரிமையை விற்க முடியவில்லை. அந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
 
கார்த்திக் சுப்பாராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஜிகர்தண்டா படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது. இப்போது வேண்டுமென்றே, தவறான தகவல்களை மையப்படுத்தி உண்மைக்கு புறம்பானவற்றை கூறி கோர்ட்டில் எங்கள் மீது வழக்கு தொடுத்து தடை உத்தரவும் பெற்றிருந்தார். 
 
மேற்படி தடை உத்தரவை சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் எங்கள் மீது மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம். 
 
- இவ்வாறு பேட்டியின் போது கலைச்செல்வி கூறினார்.