1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By திருமலை சோமு, பெய்ஜிங்
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (18:02 IST)

உலகளாவிய மந்த நிலையை போக்க ஒத்துழைப்பு ஒன்றே தீர்வு!

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடக்க நடவடிக்கைகளினால் உலகப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.. இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 5.2%  வீழ்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.  உள்நாட்டு தேவை மற்றும் வழங்கல், வர்த்தகம் மற்றும் நிதி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மேம்பட்ட பொருளாதாரங்களிடையே பொருளாதார நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டில் 7% குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்கள் (EMDE கள்) இந்த ஆண்டு 2.5% குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இத்தகைய சிக்கலில் இருந்து மீள சர்வதேச ஒத்துழைப்பு ஒன்றே முக்கிய தீர்வாகும் என்று மூத்த பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சுகாதார மற்றும் பொருளாதார அவசரநிலைக்கு தீர்வு காண்பதோடு, மக்கள் தொகை அதிகரிப்பு, வறுமை மற்றும் வேலையின்மை அதிகரிப்பை தடுக்க முடிந்தவரை வலுவான மீட்சியை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய உலக சமூகம் ஒன்றுபட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். 
 
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசாங்கங்களிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதே உலகப் பொருளாதாரத்திற்கான ஒரே வழி என்று பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சர்வதேச பொருளாதார பரிமாற்றங்களுக்கான சீனா மையத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சென் வென்லிங் கூறினார்.
 
அதிக கடன் நிலைகள், சிதைந்த உலகளாவிய வழங்கல் மற்றும் தொழில்துறை சங்கிலிகள் மற்றும் அதிகரித்துவரும் வேலையின்மை விகிதம் உள்ளிட்ட அபாயங்களால் உலகப் பொருளாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என சென் எச்சரித்தார்.
 
முன்னறிவிப்பின் படி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகளாவிய பாதகமான சூழல் அதிகமாக காணப்படுகிறது.  எனினும் 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 4.2% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு 6.1% வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது, அதேபோல் ஜப்பானின் பொருளாதாரம் 6.1 வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடுமையான சோதனையை எதிர்கொள்கின்றன, இந்நிலையில் சர்வதேச பொருளாதார பரிமாற்றங்களுக்கான சிந்தனை கிடங்கு உச்சி மாநாடு சீனா மையத்தால் நடத்தப்பட்டது.
 
இதில் பங்கேற்ற பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றங்களுக்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் புதிய உத்வேகத்தை செலுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு வேண்டும் என்பதால் கூட்டு ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
 
மூத்த பொருளாதார வல்லுனரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் உறுப்பினருமான வாங் யிமிங் கூறுகையில் உலக நாடுகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை துரிதப்படுத்த வேண்டும் மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், அவை உலக பொருளாதார மீட்சியின் இரண்டு முக்கிய தீர்வுகளாகும். உரையாடல்களை வலுப்படுத்தவும், உலகளவில் கடன் மற்றும் நிதி அபாயங்களைத் தீர்க்கவும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உலக நாடுகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வாங் கூறினார்.
 
வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு தனது சமீபத்திய அறிக்கையில், உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.3 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்றும், உலகளாவிய வர்த்தகம் இந்த ஆண்டு ஐந்தில் ஒரு பங்காக குறையும் என்றும் அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்றும் ஐ.நா நிறுவனம் எச்சரித்தது.
 
சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் லியு யுவான்சுன், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையில் இருந்து தப்பிக்க தொழில்நுட்ப புரட்சி உலகிற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என்றும் நாடுகள் தடைகளை உடைத்து பொருளாதார மீட்சி அடைய வேண்டும் என்றும் கூறினார்.
 
இந்த ஆண்டு சீரான பொருளாதார வளர்ச்சி காணும் சில முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சீனாவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் லாபம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு 19.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டு சுமார் 8 சதவீதமாக உயரக்கூடும் என்று சில சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளன.