1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (09:19 IST)

கிரிமினல் வழக்கு தொடர்ந்தவர் ஸ்ருதியுடன் சமரசம்

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தங்களின் படத்திலிருந்து ஸ்ருதி திடீரென்று விலகிவிட்டதாகவும், அதனால் தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பிவிபி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ருதி புதிய படங்களில் நடிக்க தடை விதித்தார். இந்தத் தடையை எதிர்த்து ஸ்ருதி ஹைதராபாத் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் ஒப்பந்தத்தை மீறி படக்குழுவினர் செயல்பட்டனர் என்றும், கால்சீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தும் ஏப். 1–ந் தேதி படப்பிடிப்புக்கு மார்ச் 17–ந் தேதிதான் தகவல் தெரிவித்தனர் என்றும், புதிய படத்தில் பிசியாக நடித்ததால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்றும், வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர் என்றும் மனுவில் கூறி இருந்தார். 
 
இந்நிலையில் ஸ்ருதி நடிகர் சங்கத்திலும், பிவிபி சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பரஸ்பரம் புகார் கூறியிருந்ததால், இந்தப் பிரச்சனையில் சுமூக தீர்வுகாண நடிகர் சங்க, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. 
 
ஸ்ருதி அட்வான்ஸை திருப்பித் தருவது என்றும், பிவிபி சினிமா ஸ்ருதி மீதான வழக்கை திரும்பப் பெறுவதும் எனவும் இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இன்று இது சம்பந்தமான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட உள்ளனர்.