சினிமாவைப் பார்த்து சினிமா எடுக்கக்கூடாது : இயக்குநர் லெனின் பாரதி
நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த ’மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பாக விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் ’தமிழ் பண்பாட்டு மையம்’ மற்றும் 'பதியம் இலக்கிய அமைப்பு’ சார்பில் இயக்குநர் லெனின் பாரதியுடனான கலந்துரையாடல் நிகழச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் பாரதி,
’ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்திப் பார்க்கவைப்பது மட்டும் என்றில்லாது, ரசிகர்களின் உணர்வுகளை உள்வாங்கவும் கருத்துக்களை பகிர்வதற்கும் இது மாதிரியான நிகழ்வுகள் அவசியமாகிறது.
நான் சினிமாவைப் பார்த்து சினிமா எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் என் வாழ்க்கையில் என்னை பாதித்த சம்பவங்களை திரைப்படமாக எடுக்கிறேன்.தொழிலாளர்களின் மத்தியில் தொழிற்சங்கத்தின் பணியை பிரிக்க முடியாது என்பதால் தான் படத்திலும் கம்யூனிஸ்ட் காட்சியை இடம் பெறச் செய்துள்ளேன்.
மேலும் என்னை தொந்தரவு செய்த சம்பவங்களை படமாக எடுக்கிறேன். இனிமேலும் அது போன்ற தொந்தரவு தரும் விஷயங்களையே படமாக எடுப்பேன். கலைஞனின் வேலை பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல. பிரச்சனையை முன்வைப்பது மட்டுமே.’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.