வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By திருமலை சோமு
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (23:13 IST)

தேசிய விடுமுறை நாட்களில் வசூலை அள்ளிக் குவித்த சீன பாக்ஸ் ஆபிஸ்

சினிமா ஒரு பொழுதுபோக்குக்கான விசயம் என்பதையும் தாண்டி அது மனிதர்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்டதாகவும் காலத்தின் பிரதிபலிப்பாகவும் மாறியிருக்கிறது என்றால் மிகையில்லை. சினிமா உலகெங்கிலும் கனவுத் தொழிற்சாலையாக மட்டுமல்லாமல் சமூக நிஜங்களின் நிழலாகவும் விளங்குகிறது. 

கரோனா பாதிப்பு இத்தகைய சினிமா துறையையும் விட்டுவைக்கவில்ல. கரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரங்களை இழந்தவர்களில் சினிமா துறையினரும் அடங்குவரார்கள். படப்பிடிப்புகள் ரத்து, திரையரங்கங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளினால் ஏராளாமான திரைக்கலைஞர்களின் வருமானம் பாதிப்படைந்தது.  இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.எனினும் திரையரங்கங்கள் இயங்காத காலங்களில் இந்திய அளவில் 7 திரைப்படங்கள் ஓடிடியில் (ஓவர் தி டாப் மீடியா - அதாவது இணையதளங்களில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். 
 
இதனிடையில் சீனாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் அங்கு ஏறத்தாழ மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். திரையரங்குகளும் திறக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து நாடுமுழுவதும் செவ்வாய்க்கிழமை காலை பாக்ஸ் ஆபிஸ் 3 பில்லியன் யுவான் வருமானம் ஈட்டியது. அக்டோபர் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட, "மை பீப்பிள், மை ஹோம்லேண்ட்" என்ற ஆந்தாலஜி நாடகத் திரைப்படம் "ஜியாங் ஜியா: லெஜண்ட் ஆஃப் டிஃபைஷன்" போன்ற படங்கள், கடும் போராட்டத்திற்கு பிறகு திரைக்கு வந்து 1.4 பில்லியன் யுவான் வசூல் செய்து தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது என்று பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது. "நே ஜா" படத்திற்குப் பிறகு திரைப்பட தயாரிப்பாளர் என்லைட் மீடியாவின் புராண பிரபஞ்சத் தொடரின் இரண்டாவது தவணையாக, சீனாவின் அதிக வசூல் செய்த அனிமேஷன் படமான "ஜியாங் ஜியா" வெற்றிகரமாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது வெளியான முதல் நாளில் 350 மில்லியன் யுவானைப் பெற்றது, 
கடந்த வாரம் முழுவதும் சீனாவில் தேசிய விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. 
 
2016 முதல் 2019 வரை, தேசிய தின விடுமுறை நாட்களில் சீனவில் பாக்ஸ் ஆபிஸ் முறையே 1.58 பில்லியன் யுவான், 2.629 பில்லியன் யுவான், 1.904 பில்லியன் யுவான் மற்றும் 4.386 பில்லியன் யுவான் வரை வசூலானது. 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை விடுமுறை காலங்களில் திரைப்பட பார்வையாளர்களின் எண்ணிக்கை முறையே 77.2036 மில்லியன், 53.9546 மில்லியன் மற்றும் 110 மில்லியன் ஆகும். இந்த ஆண்டு தேசிய தின விடுமுறையில் திரைப்பட பார்வையாளர்களின் எண்ணிக்கை 99 மில்லியனைத் தாண்டியது.
 
2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தின் தேசிய தின விடுமுறையில் ஒரு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, வருவாய் முறையே 283 மில்லியன் யுவான், 385 மில்லியன் யுவான், 363 மில்லியன் யுவான் மற்றும் 815 மில்லியன் யுவான். இந்த ஆண்டு தேசிய தினத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 740 மில்லியன் யுவான் ஆகும்.
 
இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இதுபோன்று வசூலைக் அள்ளி குவிக்க பல திரைப்படங்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் விஜய், ரஜினி, அஜித் உள்பட பலரின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஹிந்தி தமிழ் தெலுங்கு ரசிகர்கள் வாழ்வில் சினிமா ஒரு அங்கமாக இருப்பதால் நிச்சயம் அதிக வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வசூல் சாதனைதை தாண்டி பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால் சீனாவில் இன்னமும் கரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. திரையங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு உடல் வெப்ப சோதனை, மாஸ்க் அணிவது, மற்றும் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே இருக்கையில் இடைவெளி விட்டு அமர வேண்டும் போன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 
 
ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவற்றால் மட்டுமே பொருளாதார வளத்தை பெருக்கி கொள்ள முடியும்.  அந்த சேவைத் துறை மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தற்போது  திரை அரங்குகள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களின் திறப்பு சுற்றுலா துறை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் விரைவில் பொருளாதார மீட்சியடையும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 
- திருமலை சோமு, பெய்ஜிங்